”திருப்பூர் புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 7ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை அனைவரும் இலவசமாக இக்கண்காட்சியை கண்டு களிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு ...

மாணவர்கள் ஒற்றுமைக்கு சபாஷ் !

| 0 comments |

முதலில் சில பத்திரிக்கை செய்திகளை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்:

1) கடந்த ஜன., 28 இல் கடலூர் வண்டிப்பாளையத்தில் அருணா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 19. அவர் ஒரு பொறியியல் மாணவி, கல்லூரியின் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை அவரின் குடும்பத்தினரால் செலுத்தமுடியவில்லை. “இதனால் கல்லூரி விடுமுறையின் போது மிகுந்த மன வேதனையுடன் காணப்பட்ட அவர், திடீரென தற்கொலை செய்துகொண்டார்” என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். புலியூர் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

2) அதே நாள் கோவை அன்னூர் அருகேயுள்ள சசூரி கல்வி நிறுவனத்தின் அநியாயக் கல்விக் கட்டண வசூலைக் கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றார்கள். இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் வழிகாட்டுதலுடன் அவர்கள் குற்றச்சாட்டை அண்ணா பல்கலைகழகத்திடம் நேரில் கொடுத்திட்டார்கள். மாணவர் ஒற்றுமையைக் கண்ட கல்லூரி நிர்வாக காலவரையின்றி கல்லூரியை மூடுவதாக அறிவித்தது.

3) ஒரு வார இடைவெளியில் திருப்பூரை அடுத்த விஜயமங்கலத்தில் அமைந்துள்ள சசூரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். காரணம் கட்டணக் கொள்ளை. திறமையற்ற ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லாமல் அந்த நிறுவனம் இயங்கிவருகிறது என்பது தெரியவந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிகமான கல்விக் கட்டணமும், அதற்காக நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்குதல்களும் இன்றைய இளைஞர்களைப் பாடாய் படுத்துகின்றன. ஒரு மாணவியை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய அதே விசயம், பின்னைய மாணவர்களை போராடத் தூண்டியிருக்கிறது. அதற்கு காரணம் மாணவர்கள் சங்கமாக இணைந்திருந்ததும், மாணவர் தலைவர்கள் காலத்தில் விழித்துக் கொண்டதும்தான் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நிறுவனமயமான இன்றைய கல்விச் சந்தையில், லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கடிவாளமற்ற குதிரைகள் மூர்க்கத்துடன் பாய்கின்றன. லாபத்தைப் பெருக்குவதற்காக அவர்கள் கையாளும் குறுக்கு வழிகள் மாணவர்களை கசக்கிப் பிழிகிறது. நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அறக்கட்டளைகள் இணைந்தே இருக்கின்றன. கல்லூரி நுழையும்போது கட்டணத்துடன் ’நன்கொடை’. நீங்கள் ஓட்டாண்டியாக இருந்தாலும் கடன் வாங்கியாவது “கொடை” கொடுத்தாக வேண்டும்.

கல்லூரி நுழைந்ததும் புத்தகம், நூலகம், தேர்வு என தனித்தனியாக கட்டணம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மொத்தமாக கட்டணம். மொத்தமாக வழங்கப்படும் கட்டணத்தை பிரித்து தனித்தனியாக கூறச்சொன்னால் அதில் ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டணங்கள் மீண்டும் பல்லை காட்டுகின்றன. உதாரணமாக: மேற்சொன்ன சசூரி பொறியியல் கல்லூரியில் நடந்ததைப் பார்க்கலாம்.

கொள்ளையடிக்கும் குறுக்கு வழிகள்:
அரசு ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம், தரச்சான்று பெறப்பட்ட படிப்புகளுக்கு ரூ.40 ஆயிரமும், தரச்சான்று பெறப்படாத படிப்புகளுக்கு ரூ.32 ஆயிரத்து 500 ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வசூலிக்கப்பட்டுள்ள கட்டணம் வருடத்திற்கு 98 ஆயிரத்து 400, நான்கு வருடங்களுக்கு ரூ.4 லட்சம், அதில் விடுதிக் கட்டணம் மட்டும் ரூ.69 ஆயிரம். அதாவது எந்த வசதியும் இல்லாத சிறிய அரையில் 4 மாணவர்கள் சேர்ந்து தங்கி படிக்க ஒவ்வொருவருக்கும் ரூ.1500 மொத்தம் ரூ.6 ஆயிரம் கட்டணம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் உணவுக்காக மாதம் ரூ1500 வசுலிக்கப்படுகிறது. கொடுக்கப்படாத புத்தகம் மற்றும் சீருடைகளுக்காக வருடம் ரூ.10,000 கொள்ளையடிக்கின்றனர். தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவை இரண்டுமுறை வசூல் செய்யப்படுகின்றன.

மேலும் அவ்வப்போது அபராதமாக குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில் வருடம் சுமார் ரூ.5 கோடி அங்கே வசூலாவதாக நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் ரூ.4 கோடி முறையற்ற கணக்குகள் காட்டி மாணவர்களிடமிருந்து உரிஞ்சப்படுவதாகும். (திருப்பூரில் வழிப்பறிக் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் பணத்தைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகம்) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தரப்படும் கல்விக் கடனை, மோசடியான கட்டண விகித்தத்தை எழுதிக்கொடுத்து அரசு வரைமுறைக்கு அதிகமான தொகையை அவர்கள் பெற்றுள்ளனர். இதனால் மாணவர்கள் பெயரில் கடன் சுமையும் அதிகரிக்கிறது.

நேர்மையற்ற வியாபாரம்:
இவ்வளவும் செலுத்தினாலும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறதா? என்று கேட்டால், “ கல்லூரி ஆசிரியர்கள் முறையான கல்வியாளர்கள் இல்லை. ஒரு துறையின் தலைவர் அதே கல்லூரியில் சென்ர வருடம்தான் பொறியியல் படித்து முடித்தார். அவரை அப்படியே ஆசிரியராக நியமித்துவிட்டனர். லேப், புத்தகங்கள், வகுப்பறைகள் எதுவும் பொறியியல் கல்லுரியின் தரத்தில் இல்லை. விடுதியில் படிப்பதற்கான சூழலே இல்லை, இரவு நேரங்களில் விச வண்டுகள் மாணவர்களை பதம் பார்க்கின்றன, சத்தாண உணவு கிடைப்பதில்லை” என்று சொல்லிக் கொண்டேபோகின்றனர் மாணவர்கள். பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்பும் சுறுங்கிவருவது மாணவர்களை அச்சத்தில் அழ்த்தியுள்ளது.

கல்வி வியாபாரமாகக் கூடாது என்பது ஒருபுறம், அடிப்படை வியாபார நியாயம் கூட இல்லாமல், தரமற்ற கல்வியை கொள்ளை விலைக்கு விற்று லாபம் பார்க்கும் இந்த நிறுவனங்களை என்னவென்பது?.

ஊடகங்களின் அரசியல்:
இத்தனை கலகங்களுக்குப் பின்னரும், நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை, அரசு நிர்வாகம் கேளாக் காதராய்க் கிடந்தது செய்தியை உலகறியச் செய்யவேண்டிய ஊடகங்கள் பலத்த மெளனம் காத்தன. விளம்பரதாரர் நலன் குறித்துக் கவலைப்படும் அவர்களின் வியாபார நோக்கத்தை இங்கே குறிப்பிட வேண்டியதில்லை. இரண்டுமுறை மறியல் செய்தும் அவர்கள் அசையவில்லை. தெருவில் இறங்கிய மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகை 2 மணிநேரம் நடந்தது இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ், வாலிபர் சங்க திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் வடிவேல், ஊத்துக்குளி பேரூராட்சித் தலைவர் குமார் என தலைவர்கள் முன்ந்ன்று கோசமிட்டனர். உறுதியாக நடைபெற்ற அந்தப் போராட்டத்தின் வாயிலாக மாணவர்களின் குரல்கள் அரசின் செவிப்பறையில் ஓங்கி அரைந்தன. இதைத் தொடர்து செய்தியேடுகள் செய்தி எழுதின (நிறுவனத்தின் பெயர் குறிப்பிடாமல்.).

பேச்சுவார்த்தையில் கிடைத்தது தீர்வு:

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குஆர்டிஓ தலைமைதாங்கினார். அண்ணா பல்கலைகழக பிரதிநிதி ஒருவரும், கல்லூரி தரப்பில் முதல்வர் டி.கே.சண்முகநாதன், செயலர், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமார், மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

1. 32 ஆயிரத்து 500 மற்றும் நியாயமான விடுதிக்கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்கள் தவிற மற்ற தொகைகள் திரும்ப் கொடுக்க வேண்டும்.

2. எம்இ முடித்தவர்களை மட்டும் ஆசிரியராக மாற்ற வேண்டும்.

3. 10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது முறையற்றது. ரூ.100 வரை மட்டுமே விதிக்கலாம்.

4.அடிப்படை வசதிகளை அண்ணா பல்கலை கண்காணிக்கும். விளையாட்டு மைதானத்தில் கட்டடம் கட்டப்பட மாட்டாது.

5. பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது. மாணவர்களுக்கு திரும்பவும் வகுப்புகள் எடுக்க வேண்டும். வருகைப்பதிவுகள் போதாத நிலை இருந்தால் அந்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலை சிறப்பு கவனம் எடுத்து, தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கும்.

6. மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும்.

7. விண்ணப்ப படிவங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தவறு. இனி செய்யக் கூடாது.

ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தெரியவில்லை, இதுநாள் வரையில் இவர்கள் இதே குற்றங்களைத்தானே செய்து வந்திருக்கிறார்கள்?. அதற்கு என்ன தண்டனை?

அது ஒருபுரம் இருக்கட்டும். ஒற்றுமையாய் இருந்து இத்தனையும் சாதித்த ... சசூரி கல்லூரி மாணவர்களுக்கு சபாஷ் !

”செவிட்டுக் காதுகளைக் கேட்கச் செய்ய வேண்டுமானால், அதற்கு அதிக சத்தம் தேவைப்படுகிறது !” - பகத்சிங்


கனவுகள் வெறும் கனவுகளாகவே முடிந்துபோவதில்லை ... - Let me Do it !

என்னைப் பற்றி ...

வாழ்க்கையை நேசிப்பவன், இளம் கவிஞன், செய்தியாளன் .. அவ்வளவுதான் .. மற்றதை என் பதிவுகள் தான் பேச வேண்டும் .. இல்லையா?
Thanks: Boominathan for sponsoring the web address