இப்போது கல்விச் சந்தை தாறுமாறான விலை ஏற்றத்தை (!) சந்தித்து வருகிறது.
ஆம் அதனை "விலை ஏற்றம்" என்றுதான் சொல்லியாக வேண்டும்.
வருங்கால சந்ததிக்கு கல்வி தரும் கடமையில் மத்திய மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டுவதில்லை. அதனால் தனியார் நிறுவனங்கள் கல்வியைச் சரக்காக்கி, அதனை தங்களது கடைகளில் போட்டிபோட்டு அதிக விலைக்கு விற்கத் துவங்கியுள்ளனர்.
இப்போதும் அரசுக் கல்லூரிகளில் சில ஆயிரங்கள் செலவு செய்தால் பட்டப் படிப்பை முடித்து வெளியேறலாம். ஆனால் அந்த வாய்ப்பு
அனைவருக்கும் கிடைப்பதில்லை. பனியன் நகரமான திருப்பூரில் பல பள்ளிகளில் எல்கேஜி படிப்பிற்கே பத்தாயிரம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
உதாரணமாக படத்தில் தரப்பட்டுள்ள கட்டண விபரத்தைப் பாருங்கள்.

முதல் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுச் செல்லும் ஒரு மாணவனின் கட்டண விபரங்கள் அதில் உள்ளன. முதலில் செலுத்தவேண்டிய கட்டணம் ரூ. 4925 அதன் பிறகு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 1925 இதல்லாமல் பாடப் புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்களையும் நீங்கள் பள்ளியிலேயே வாங்கியாக வேண்டும். அதற்கான கட்டணம் ரூ.890. இவையல்லாது உங்கள் குழந்தையின் பள்ளிச் சீருடை முதல் கைப்பை, காலுறை வரை எல்லாம் பள்ளியிலேயே விலைக்குக் கிடைக்கும். மொத்தமாக வருடக் கட்டணம் ரூ.10,700 மற்றும் இதர செலவுகள், (பள்ளி வாகனம் இருந்தால் அதற்கான கட்டணமும் தனி).
இப்படிச் சொன்னால், அரசு நடத்தும் இலவசப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கலாமே என்று நீங்கள் கேட்கக் கூடும். உண்மைதான் அரசின் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் உண்மை நிலை என்ன? இப்போது எஸ்எஸ்ஏ திட்டத்தின் மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் ஊருக்கு ஊர் பள்ளிக் கட்டிடங்களை அரசு திறந்தும் வருகிறது. ஆனால் "ஆசிரியர்களை மட்டும் நியமிப்பதில்லை" . இப்படித்தான் அரசாங்கங்களால், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள சில அரசுப் பள்ளிகள் மட்டும் "சுய நிதி" திரட்டி போதுமான ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்து செயல்படுகின்றன. ஆனால் அதன் காரணமாக அரசுப் பள்ளிகளிலும் ஏழைகளுக்கு கட்டுப்படியாகாத அளவில் கல்வியின் கட்டணம் உயர்கிறது. மீதமுள்ள பள்ளிகளிலோ கல்வித் தரம் அதல பாதாளத்தில் வீழ்ந்துகிடக்கிறது.
ஆசிரியர் பயிற்சி முடித்தும் வேலை கிடைக்காமல் சுற்றும் திறமையான இளைஞர்களை குறைந்த சம்பளத்தில் வளைத்துப் போட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றன. அரசு நிர்வாகங்களோ எப்போதும்போல இவற்றை கண்டும் காணாமல் செயல்படுகின்றன.
இன்றைய சூழலில் தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான தேவை அதிகரித்து வருகிறது.
ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும் !
ShareThis
