மீண்டும் ஒரு இடைக்காலத் தீர்ப்பு எழுதப்படுகிறது.

1947 , ஆகஸ்ட் 15 ல், நள்ளிரவில் விடிந்த இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நடக்கும் ஒவ்வொரு தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்ததே, ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட இந்தியா, தேர்தல் தீர்ப்பின் மூலம் காட்டப்போகிற திசையை உலகம் கவனிக்கிறது. தனிக் கட்சி ஆட்சி என்பதற்கு ஏற்கனவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் இப்போதைக்கு அரசியல் அரங்கில் மூன்று பிரதான  கூட்டணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன. கூட்டணிகள் கணக்குகள் என்னவாக இருப்பினும் மக்கள் வாழ்க்கையில் இருந்தே பதில் சொல்லப் போகிறார்கள்.

இந்திய எதார்த்தம்:
கடந்த அறுபத்து இரண்டு ஆண்டுகளில் இந்திய வலதுசாரிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான ஆட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். தேர்தல் காலங்களில் அவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பலவும் இன்றும் தொடருகின்றன. "வறுமை", "வேலை இல்லாத் திண்டாட்டம்" ஆகியவை தீராத நோயாக இந்தியாவைப் பீடித்திருக்கின்றன. 

சிறுதொழில்கள்- விவசாயம்:
உலகமயமாக்கல் இந்தியாவில் அமுல்படுத்தப் பட்ட பிறகு சிறு தொழில்களும், விவசாயமும்  கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.  கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் பிரபலமான மாப்பிள்ளை விநாயகர், காளிமார்க் சோடாக் கம்பெனிகள், சோப்புக் கம்பெனிகள் தடம் தெரியாமல் அழிந்துவிட்டன. ஊறுகாய் கூட "சின்நீஸ்" என்கிற பெயரில் நமக்கு மறு அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வாறு குடிசைத் தொழில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் சிறு தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வில் பேரழிவுக்கு சமமான விளைவுகளை எபடுத்தியிருக்கிறது 

உதாரணமாக ஒரு சோடா கம்பெனி மூடப்பட்டால். அதன் மூலம் - தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்ப்பனை ஆகிய பிரிவுகளில் வேலை செய்தவர்கள், மூலப் பொருட்களை தயாரிப்பவர்கள் ஆகியோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சார்ந்து நடக்கும் தொழில்கள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.  இதன்மூலம் பெரும் வேலை இழப்பு ஏற்படுகிறது. இன்னொருபக்கம் பெரிய நிறுவனங்கள் மிகச் சொற்பமானவர்களுக்கே வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. மேலும் லாபத்தில் வரும் பணமோ ஓரிடத்தில் குவிகிறது. 

மறுபக்கம், இந்திய விவசாயிகள் தங்கள் இடுபொருட்கள் விலை  உயர்வாலும், விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததாலும்  தள்ளாடுகிறார்கள். கந்துவட்டி அரக்கனிடம் சிக்கி லட்சக்கணக்கில் மாண்டு போகிறார்கள். இவ்வாறு பொருளாதாரம் வருடம் 8 புள்ளிகள் வளர்ந்தாலும் மக்கள் வறுமையில் உழல்வது தேசத்தில் தலை எழுத்தாகிப் போனது.

வேலை வாய்ப்பு:
பத்து வருடங்களுக்கு முன்பு "கால் காசு என்றாலும் அரசாங்க காசு" என்பதாக ஒரு பழமொழி இருந்தது. ஆனால் பிற்காலங்களில் அரசு வேலை என்பது கனவாகிப் போனது. இப்போதெல்லாம் ஆண்டிற்கு குறிப்பிட்ட சதவீதம் (2.5% to 5%) பேரை அரசு வேலையில் இருந்து தூக்குவதை தனது கொள்கைகளில் ஒன்றாக அரசு வைத்திருக்கிறது. கல்வி பெற அனைவருக்கும் வாய்ப்பில்லை, அப்படி படித்து வந்தாலும் படித்த படிப்புக்கான வேலை கிடைப்பதில்லை. ஒருபக்கம் சிறிய தொழில்கள் அழிகின்றன, மறுபக்கம் புதிய வாய்ப்புகள் மறைகின்றன. நிச்சயமற்ற வாழ்க்கையே அனைவருக்கும் வாய்த்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடி:
இன்னொரு புறம் உலக பொருளாதார நெருக்கடி, இந்தியாவின் தலைக்கு மேல் கத்தியாக தொங்குகிறது. இதுவரை நமது ஆட்சியாளர்களின் பாவ மூட்டையை சுமந்த நாம், இனி வரும் காலங்களில் அமெரிக்க பொருளாதார நெருக்கடி எனும் சுமையையும் சேர்ந்தே தூக்க வேண்டியிருக்கும். திருப்பூரில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்யும் நாராயணசாமி: "கடந்த மாதம் முழுக்க வேலை செய்து பெற்ற சம்பளத்தில் பாதியளவே இந்த மாதம்  பெற்றிருக்கிறேன். எனது சம்பளம் பாதியாகக் குறைந்துவிட்டது." என்று கூறினார். இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில் நகரங்கள் பெரும் வேலை இழப்பை, சம்பள வெட்டை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்த இருக்கிறது.

இவ்வாறான பிரச்சனைகள் வரும் என்று ஆராய்ச்சி மணி அடிக்கப்பட்டு பல மாதங்களாகிறது, ஆனால் வேலை இழப்பை தடுக்க மேற்சொன்ன  அரசுகள் எதுவும் செய்யவில்லை. தேர்தலுக்கு பிறகும் நெருக்கடியில் இருந்து மீள அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. 

ஏழை நாடாக தனது சுதந்திர பயணத்தை துவக்கிய இந்தியா, தற்போது ஏழைகள் அதிகம் வசிக்கும் பணக்கார நாடாக மாறியிருக்கிறது. வலதுசாரி கொள்கைகளின் தலைமையில் வாழ்க்கைச் சூழல் மோசமடைந்து வருகிறது. 
விலைவாசி உயர்கிறது ஆனால் சம்பளம் குறைகிறது. சுத்தமான குடிநீர், சத்தான உணவு, நல்ல உடை தங்குவதற்கு வீடு, நல்ல கழிப்பிடம், கல்வி, பாதுகாப்பான வாழ்க்கை பெரும்பாலானோருக்கு கனவாகவே நீடிக்கிறது. 

இடதா? வலதா?
ஆனால் கடந்த அறுபது ஆண்டுகளில் ஏற்படாத ஒரு வாய்ப்பு இப்போது முன் வந்திருக்கிறது. ஆம் இதுவரை ஒரே வகையான கொள்கைகள் மோதி வந்த இந்திய அரசியல் அரங்கில் மாற்றுக் கொள்கைகள்  முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 

அந்தக் கொள்கைகள் கொண்ட அரசு 

  • விலையை கட்டுப்படுத்தும்,
பெட்ரோல் டீசல் விலைகளை குறைப்பதன் மூலம் உடனடியாக 80 அத்தியாவிசயப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் ..!

  • வேலை வாய்ப்பை உருவாக்கும்
பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க உள்நாட்டு சந்தைகளை பலப்படுத்தும் வகையில், பெரும் வேலை வாய்ப்பு திட்டங்கள் வகுக்கப்படும். அதில் நீர் பாசனம் மற்றும் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப் படும்.
வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் நகர்ப்புற ஏழைகளின் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.
 
  • விவசாயப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும்
அரசே விலை பொருட்களை கொள்முதல் செய்யும் - இடைத் தரகர்கள் இருக்க மாட்டார்கள் - யூக வாணிகம் தடை செய்யப்படும்.

  • பொது விநியோகத்தை பலப்படுத்தும்
அதன் மூலம் அத்தியாவிசயப் பொருட்கள் குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கப்படும்.

  • கல்விக்கு அதிக நிதி ஒதுக்கும்,
வருங்கால இந்தியாவிற்காக முதலீடாக கருதப்பட்டு செலவு சியப்படும். கல்வி தருவது அரசின் கடமை என்று ஆக்கப்படும்.

  • ஜனநாயகம் வலுப்படுத்தப் படும்,
மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரமும், அதிக நிதியும் வழங்கப்படும்.

  • பங்கு சூதாட்டத்தின் வருமானம் மற்றும் கொள்ளை லாபத்தின் மீது வரி அதிகரிக்கப்படும். இன்னும் மக்களை பாதிக்காத பல வழிகளில் (கருப்பு பணத்தை கைப்பற்றுவது உட்பட) பல வழிகளில் நிதி திரட்டப்படும். .. ect.,

மேலும் பல்வேறு விசயங்களை அவர்கள் செய்யலாம்...  
இதுவரை தேசிய கட்சிகளுக்கு பல்லக்கு தூக்கி வந்த மாநில கட்சிகள் பலவும் இந்த புதிய முயற்சிக்கு தயாராகியிருக்கின்றன. அதனால் மாற்று அணி வலுவாகியிருக்கிறது. முழுமையாக இடதுசாரிகள் தலைமையிலாக ஆட்சி நடக்க வாய்ப்பில்லை என்றாலும், அவர்களின் தலையீட்டின் மூலம் அதிக காரியங்களை சாதிப்பார்கள். 

ஆனால் சரியானது எது என்று தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடமே இருக்கிறது. தேசத்தின் தேர்ச் சக்கரம் இனி எந்தப் பாதையில் திரும்பப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். !  

ஒன்றை மறந்துவிடக் கூடாது .. வரப்போகிற தேர்தல் முடிவுகள் இருக்கிற சமுதாய அமைப்பின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எழுதப்படும் இன்னுமொரு இடைக்காலத் தீர்ப்பே .. !
ShareThis