- செம்மலர் இரா சிந்தன்
தினம் தினம் பல்வேறு வகையிலும் நூதன மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். நவீன தொழில் நுட்ப வளர்ச்சிகளை அவர்கள் விட்டு வைப்பதாக இல்லை. அதிகமான இளைஞர்களை இழுத்துவரும் இணைய ஊடகம் இப்போது மோசடிக்காரர்களின் சொர்கமாகியுள்ளது. ஏமாறும் இளைஞர்களுக்கு அவர்கள் 'வலை' விரித்துக் காத்திருக்கிறார்கள்.சில வருடங்களுக்கு முன்பாக "நடிகை அசின்" என்று ஏமாற்றி, வெளிநாட்டில் பணியாற்றும் ஐடி தொழில்நுட்ப நிபுணரிடம் பணம் கறந்த இளம் பெண் பற்றி பரபரப்பான செய்தியை படித்தோம். ஆனால் அது பழைய கதையாகிவிட்டது.
தினம் தினம் புது புது வடிவங்களில் அவர்கள் தலை தூக்குகின்றனர். இணையத்தில் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தும் நண்பர்களுக்கு இப்படி சில தனிப்பட்ட கடிதங்கள் வருகின்றன. அவை பெரும்பாலும் இளம் பெண்களின் பெயரிலேயே இருக்கின்றன. அவர்கள் ஏதேனும் வகையில் முதலில் மின்னஞ்சல் முகவரியை சேகரிக்கிறார்கள். அதன் பிறகு உருக்கும் வாக்கியங்களோடு அறிமுகக் கடிதம் அந்த முகவரிக்கு அனுப்பப்புகிறது. அதில் தான் 24 வயது இளம் பெண் எனவும், நல்ல நட்புக்கும் ஏங்கி வருவதாகவும், மனதின் துக்கத்தை இறக்கி வைக்க ஒரு தோழன் வேண்டும் என்றும் கேட்கிறார்கள். இந்த தூண்டிலில் யாரேனும் மாட்டிக் கொண்டால் அவர்களை வைத்து நினைத்தை சாதிப்பதே அவர்களின் எண்ணம்.
கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவர் ஒருவருக்கு இவ்வாறு கடிதம் வந்தது. அந்த இளம்பெண் தன்னை காங்கோ நாட்டை சேர்ந்தவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். அடுத்தடுத்த கடிதங்களில் அவரது தந்தை இறந்து விட்டதாகவும், தான் ஒரு மறுவாழ்வு மையத்தில் மிக மோசமான சூழலில் இருப்பதாகவும் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில்: எனது தந்தை காங்கோ நாட்டு விடுதலை குழுவினரால் கொல்லப்பட்டுவிட்டார், எனக்கு வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான பணம் இருக்கிறது. ஆனால் அந்தப் பணத்தை எடுக்க முடியாமல் சிக்கலில் இருக்கிறேன். எனக்கு உங்களின் உதவி தேவை குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த கடிதங்களில் பணம் உள்ள வங்கியின் பெயர், பயணாளர் பெயர் மற்றும் கணக்கு எண் மற்றும் தொகை அளவு வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த மாணவரை வங்கி மேலாளருக்கு ஒரு கடிதம் அனுப்புமாறு அவர் கேட்டுள்ளார். அதில் அவரின் சொந்த விபரங்களையும் இணைத்து, இளம் பெண்ணின் வெளிநாட்டு காப்பாளராக தான் இருக்கிறேன் கூறுமாறும், அப்படிக் கூறினால் பணத்தை எடுத்து பயன்படுத்தவும், இந்தியா வந்து வசிக்க தனக்கு உதவியாக இருக்கும் என்றும் அந்தப் பெண் கேட்டுள்ளார். இத்துடன் இளம் பெண்ணின் புகைப்படங்கள் சிலவும் வந்துள்ளது. மேற்சொன்ன கடிதம் ஒரு உதாரணம்தான்.
"ஒரு கோடி ரூபாய் லாட்டரி அடித்திருக்கிறது, உடனே உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ரகசியக் குறியீட்டு எண்ணைக் கொடுங்கள்" . என்பன போன்ற கவர்ச்சி வாசகங்களோடு பல்வேறு வகையான மோசடி மின்னஞ்சல்களும் இணையதளத்தில் உலாவுகின்றன
இதன் மூலம் ஏமாந்தவர்களின் வங்கி கணக்கு, முகவரி, அரசு ஆவணங்கள் உள்ளிட்ட சொந்த விபரங்களை அவர்கள் சேகரிக்கிறார்கள். இந்த விபரங்களைக் கொண்டு பல்வேறு காரியங்களை சாதிக்க முஇத்யும். உதாரணமாக நாம் அறியாமலே வெளிநாட்டிலிருந்து பல கோடி ரூபாய்களை கடத்தலாம் அல்லது நம் முகவரியில் போலியான பாஸ்போர்டுகள், வங்கிக் கணக்கு ஆகியவற்றை துவங்கி மோசடிகளில் ஈடுபடலாம். பயங்கரவாதிகள், கடத்தல்காரர்கள் உள்ளிட்ட சமூக விரோதிகளும் கூட நமது ஆவணங்களை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவில் சைபர் கிரைம் எனப்படும் தொழில்நுட்ப மோசடிகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் உருவாகவில்லை, தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை ஆரோக்கியமான நோக்கில் முன்னேற்ற அரசின் கண்காணிப்பை அதிகரிக்கவும், சட்ட நெறிகளை முறைப்படுத்தவும் கூடுதல் முயற்சியெடுக்கவேண்டும்.
அதேசமயம் இணைய பயனாளர்களும் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் சொந்த விபரங்களை பகிராமல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்
ShareThis