இருப்பினை இழத்தல்

செம்மலர் இரா சிந்தன்

காலத்தில் பொழியாத மழை பற்றி

கவலை இல்லை எமக்கு

நாங்கள் நகரத்து வாசிகள் ..


நாட்கள் விடியும் ..

வானத்தின் வண்ணங்கள்

பலப்பலவாய் மாறும் ..

பின் இருளும் ...


இயந்திர சுழற்சியே இன்பம் !

மழையெனில்

எமக்கு துக்கம் !

...


கருப்புக் கொடி பிடிப்போம் !

பிளாஸ்டிக் காகித்தின் கீழ்

மறைவோம்

மூடிய முக்காட்டுக்குள்

ஒளிந்துகொள்வோம் !

...

ஓட்டை ஓடுகள் வழி

வீட்டுக்குள் நீர் புகுந்து

வேலை கொடுப்பதால்

எம் வீட்டுப் பெண்களுக்கு

மழையைப் பிடிக்காது


மாநகரக் குப்பையின்

அழுகிய நாற்றத்தை

காலடியில் சேர்ப்பதால்

பாதசாரிகள்

அதை விரும்புவதில்லை ..


வியாதிகள் கொண்டுவரும் ...

நோய் தீர்க்கக் கேட்டு

மருத்துவரை நாடினால்

நீண்ட நாள் சேமிப்புகள்

கட்டணமாய்க் கரையும் ...

ஹ்ம்ம்ம் ..

வேண்டாத விருந்தாளியை

யார்தான் அழைப்பார்?


பருகவேண்டும் ..

நனைய வேண்டும் ..

விடுமுறை தரவேண்டும்

ஒருநாளேனும்

அந்த அவசரக் குளியலுக்கு ..

ஆசைதான் .. ஆயினும்


பொருளுக்காய் அலைகின்ற

எம் நகரத்து அவசரத்தில்

பொழிகின்ற துளிபற்றி

யாருக்குத்தான் கவலை?!!


ShareThis