மழைக்கால அரண்மனையின் இளவரசர்கள் !

| |



திருப்பூர் : 21 வது வார்டு பாலமுருகன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

சில வருடங்களுக்கு முன் ஆரம்பப் பள்ளியாக ஏற்படுத்தப்பட்ட அந்தப் பள்ளி ஒவ்வொரு கட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ), மற்றும் மாநகராட்சியின் உதவியுடன் தேவையான வகுப்பரைகள் கட்டப்பட்டுள்ளது. பள்ளியைச் சுற்றிலும் சில கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் சுமார் 400 ஏழை மாணவர்கள் அங்கே படிக்கிறார்கள்.


சாமுண்டிபுரம் மேற்கு, ராஜீவ் நகர், வி.பி.சிந்தன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சாக்கடையால் இந்தப் பள்ளியைச் சுற்றிலும் அகழி அமைந்துள்ளது. அகழிக்குள் புழுக்களும் ஆபத்தான கிருமிகளும் நிறைந்திருக்கின்றன. இப்படி, ஒரு அரண்மனையின் கம்பீரத்துடன் அந்தப் பள்ளி நம்மை வரவேற்கிறது. தரைத் தளத்தில் ஒன்று முதல் ஆறு வரையிலான வகுப்புகள் அமைந்துள்ளன. அதனை ஒட்டியவாறு அமைந்துள்ள புதர் மண்டிய புல்வெளியை நீர்பூத்த சிறிய சுவர் ஒன்று பிரிக்கிறது. பூரான்கள் வருகையை தடுப்பதற்காக அங்குள்ள இரும்பு சன்னல்கள் இறுக்கி மூடப்பட்டுள்ளன.

சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி, கழிப்பரை, வகுப்பரைகள், ஓய்வரைகள், நூலகம் என எந்த வசதியும் இல்லாமல் இதுபோல் தமிழகத்தில் பல பள்ளிகள் இயங்கி வருகின்றன. இருப்பினும் இந்தப் பள்ளியின் திறமையான குழந்தைகள் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் பள்ளியின் எல்லைக்குள் நின்று ஜாக்கிரதையாக விளையாடுகிறார்கள். தரை எளிதில் வழுக்கும் படி இருந்தாலும் கூட அந்த மாணவர்கள் ஒருமுறை கூட மண்டையை உடைத்துக் கொண்டதில்லை. அகழியை லாவகமாகக் கடந்து வகுப்பரைக்குள் செல்லவும், வெளியேரவும் அவர்கள் பழகிவிட்டார்கள். இங்குள்ள ஆசிரியர்களும் திறமையானவர்கள், மாணவர்களுக்கு எல்லாவற்றையும்
சிறப்பாக கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இருப்பினும், மழைக்காலத்தின் வெள்ளத்திலிருந்து தப்பி பள்ளிக்கு வருவதும், திரும்பிச் செல்வதற்கும் அதிக சாகசங்களை அவர்கள் செய்ய வேண்டியிருக்கும். இதுகுறித்து, அந்தப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் ஒரு சிறுவனிடம் கேட்டபோது “வீட்டில் புதிய ”காலணி” வாங்கித் தரச்சொல்லிக் கேட்டிருக்கிறேன், இந்த தீபாவளிக்குள் எனக்கு கிடைத்துவிடும். உயரமான ரப்பர் காலணியை அணிவதன் மூலம் சகதியிலிருந்து கால்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்” என்றான். 6 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவி ரேவதி ”இங்கே புதிய சாலை அமைக்க வேண்டும், ஆனால் அதுவரை சாக்கடையின் நடுவில், உயர்ந்த கற்களை போட்டு வைப்பதன் மூலம் எளிமையாக சாலையை கடந்து செல்ல முடியும்” என்றாள்.

பள்ளியைச் சுற்றிலும் உள்ள பள்ளத்தில் மழை நீர் அதிகமாகும்போது அது குளம் போல மாறக் கூடும். அந்த சமயத்தில் பள்ளியை விட்டு வெளியே வருவது ஆபத்தாக முடியலாம். நீர் வடியும் வரை காத்திருந்துதான் வீட்டுக்கு திரும்ப முடியும். இருப்பினும் குழந்தைகள் அதற்கும் தயாராகி வருகிறார்கள். இப்போது அவர்கள் மும்முரமாக காகிதத்தில் கப்பல் செய்து பழகிக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளத்தில் கப்பலை மிதக்கச் செய்வதன் மூலம், காத்திருக்கும் நேரத்தை அவர்கள் மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.

கல்விச் சூழலை மேம்படுத்துவதில் துளியும் அக்கரை செலுத்தாத இந்த அரசாங்கம் குறித்து அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏட்டில் இருப்பதெல்லாம், நடைமுறையில் ஒன்றுமில்லாமல் போவதை அவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள். நீர் வரத்து மிக அதிகமாகி பள்ளியே அடித்துச் செல்லப்பட்டாலும் கூட யாரிடமும் முறையிடப் போவதில்லை. சூட்டிப்பான ஏழைக் குழந்தைகள், ”எந்த சூழலையும் எதிர்த்து மாற்றிக் காட்டுவோம்” என்கிறார்கள்.


0 comments:

கனவுகள் வெறும் கனவுகளாகவே முடிந்துபோவதில்லை ... - Let me Do it !

என்னைப் பற்றி ...

வாழ்க்கையை நேசிப்பவன், இளம் கவிஞன், செய்தியாளன் .. அவ்வளவுதான் .. மற்றதை என் பதிவுகள் தான் பேச வேண்டும் .. இல்லையா?
Thanks: Boominathan for sponsoring the web address