இயந்திரத்தை பழுதுபார்க்கக் கொண்டுசென்றால், சோதித்துவிட்டு எல்லாம் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஊசி உடைவது மட்டும் நிற்கவேயில்லை. “அட என்னப்பா நீ, மிசின் வீதி ’கனி பாய்’ கடைக்கு போ, என்ன கோளாரா இருந்தாலும் அவர் சரிசெய்து விடுவார்” என்று ஒருவர் சொல்ல, தனது இயந்திரத்தை எடுத்துக் கொண்டு அங்கு சென்றார்.இயந்திரத்தை இரண்டுமுறை சுழற்றிப்பார்த்த கனி பாய், பழுதை சில நிமிடங்களில் சரி செய்து விட்டார். வடநாட்டுக் காரருக்கோ ஆச்சரியம் தாங்கமுடியவில்லை, கேட்டதுக்கும் அதிகமான கூலியைக் கொடுத்ததுடன். மனம் விட்டு பாராட்டினார். சிரித்தபடியே ”இது சாதாரண சிக்கல், மிசின் ஓடும் சத்ததை வைத்தே கண்டறிந்துவிடலாம்” என்றார் கனி பாய்.
மிசின் வீதி கனி பாய் என்று அறியப்படும் இவரின் பெயர் ’முகமது கனி’. இந்தப் பெயர் திருப்பூரின் தொழில் முனைவோர்கள் பலருக்கும் நெருக்கம். உறங்கா நகரின் ஓயாத இயக்கத்திற்கு தையல் இயந்திரங்கள்தான் அச்சாணி. அந்த இயங்திரங்களில் ஏற்படும் பழுதுகள், எந்த வகையாக இருந்தாலும், சரி செய்து பழைய நிலைக்குக் கொண்டுவருவதுதான் இவரின் தனிச் சிறப்பு. அரதப் பழைய சிங்கர், யமோட்டோ இயந்திரங்கள் முதல் ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளில்ருந்து இறக்குமதி செய்யப்படும் நவீன வகை இயந்திரங்கள் வரை எல்லாம் இவருக்கு அத்துப்படி. முன்னணி பனியன் இயந்திர விற்பனையாளர்களான ”மேகலா” உரிமையாளர் உட்பட, இயந்திரம் பழுது என்றால், தயக்கமின்றி பரிந்துரைப்பது இவரைத்தான்.
பழுது சரிபார்ப்பது மட்டுமின்றி புதிய இயந்திரங்கள் செய்து தருவது, தேவைக்கு ஏற்றபடி மறு வடிவமைப்பு செய்வது ஆகிய வேலைகளையும் ஆர்வத்துடன் செய்துவருகிறார். உதிரிபாகங்களைக் கூட தேவைக்கு ஏற்றவகையில் வடிவமைப்பதற்கான லேத், மில்லிங் ஆகிய இயந்திரங்களை தன் வசம் வைத்திருக்கிறார். இதனால் அவரது பழுதுபார்க்கும் கடை சிறு ஆய்வுக்கூடம் போலவே இருக்கிறது.
-
“3 அம் வகுப்புதான் படித்தேன், அதுவும் மலையாளத்தில். குடும்பத்தின் வறுமை காரணமாக அப்போதே வெலைக்குச் செல்ல வேண்டி வந்தது. அதன் பிறகு, 1967 ஆம் ஆண்டில் 16 வயதில், கோயமுத்தூர் லேத்து பட்டறை ஒன்றில் சேர்ந்தேன், அப்போதே இயந்திரங்கள் பழுதுபார்க்கும் தொழிலும் பழகினேன். இந்தத் தொழில் என்னை வசீகரித்துவிட்டது. அன்று முதல் இயந்திரங்களின் அடிப்படையை கவனித்து புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அடிப்படை மனதில் இருப்பதால் என்ன பழுது ஏற்பட்டாலும் கண்டறிந்துவிட முடிகிறது.
அப்போதெல்லாம் தையல் இயந்திரம் பழுதானால் கோவைக்குத்தான் எடுத்துவரவேண்டும். எனது திறமையைப் பார்த்த சில பனியன் முதலீட்டாளர்கள், திருப்பூருக்கு வருமாறு அழைத்தனர். அதனையடுத்து பி.என்.ரோட்டில் சிறு கடையை வாடகைக்கு பிடித்து தொழில் துவங்கினேன். அப்படியே 42 வருடங்கள் கடந்துவிட்டது.” என்கிறார் அவர்.
முன்பெல்லாம் ஃப்ளாட்லாக் இயந்திரங்களில் 4, 5 நூல்கள் வரைதான் கோர்க்க முடியும், ஓவர்லாக் இயந்திரங்களில் 3 நூல்கள் வரை கோர்க்க முடியும். ஆனால் இப்போது 25 முதல் 30 நூல்கள் வரை கோர்க்கும் வகையில் ஃப்ளாட்லாக் இயந்திரங்கள் வந்துவிட்டன, ஓவர்லாக் இயந்திரங்களிலும் 4, 5 நூல்கள் வரை கோர்க்க முடிகிறது. விஞ்ஞான வளர்ச்சியில் இயந்திரங்கள் புதிது புதிதாக உறுவாகி வருகின்றன. அத்தகைய இயந்திரங்களை பயன்படுத்தினால்தான், திருப்பூர் பனியன் தொழிலில் சந்தையில் நீடித்திருக்க முடியும். ஆனால் சிறு முதலீட்டாளர்கள் அவ்வகை இயந்திரங்களை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய முடிவதில்லை. அப்படிப்பட்ட சிறு ஆலை உரிமையாளர்கள் இன்றும் கனிபாயைத்தான் தேடி வருகிறார்கள்.
அவர்களுக்கு, இறக்குமதி தரத்திற்கு நிகரான புதிய தையல் இயந்திரங்களை செய்து தருவதுடன், தேவைக்கு ஏற்ற வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறார். பழைய இயந்திரங்களை குறைந்த விலைக்கு வாங்கி வருபவர்களுக்கு அவற்றை சொற்ப செலவில் புதுப்பித்து தருகிறார். கனினி மூலம் வடிவமைக்கப்படும் எலெக்ட்ரானிக் சிப்புகள் கொண்டு செயல்படும் நவீன இயந்திரங்களை, அத்தகைய போர்டு இல்லாமலே, செயல்பட வைக்கிறார். ”கணினி தொழில்நுட்பம் குறித்து தெரியாதது ஒரு குறைதான். இளவயதில் இத்தாலியின் பெரிய நிறுவனம் ஒன்றில் பனியாற்ற வாய்ப்பு வந்தது. ஆனால் மொழி மற்றும் கல்வி அறிவு இல்லாததால் அங்கு போகவில்லை” என்று கூறும்போது அவரையும் அறியாத சோகம் வெளிப்படுவதை நாம் காண முடிந்தது.
அடுத்த முயற்சி குறித்து கேட்டதும், அவரை பழைய உற்சாகம் தொற்றிக் கொண்டது, “பனியன் தைக்கும்போது, பிசிர் நூல் வெட்டுவதற்கு குறிப்பிட்ட நேரம் செலவாகிறது. இதனால் டைலரின் உற்பத்தி திறன் குறைகிறது. தானாகவே பிசிர் வெட்டும் சீன, ஜப்பானிய இயந்திரங்கள் சந்தையில் வந்துவிட்டன. அவை கம்ப்ரசர் மூலம் வெளிப்படுத்தப்படும் காற்றைக் கொண்டு செயல்படுகின்ற்ன. ஆனால் இதற்கு ஆகும் மின்சார செலவும், பராமரிப்பு செலவும் அதிகம். கம்ப்ரசர் இல்லாமலேயே அத்தகைய வசதியை தையல் இயந்திரஙளில் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் திருப்பூரின் தன்மைக்கு பொருந்தியதாய் அவை அமையும். அதற்கான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
”புதிய முயற்சியில் அவர் வெற்றிபெற்றால், திருப்பூர் பனியன் தொழிலில் அது பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். படிப்பறிவு இல்லாவிட்டாலும், முகமது கனி யின் அனுபவம் அதிகம். இந்த முயற்சியில் அவர் நிச்சையம் வெற்றிபெறுவார்!” என்று கூறுகிறார்கள், அவரை அறிந்தவர்கள்.
இவர்தான் அந்த எந்திரன் - முகமது கனிஅவருக்கு ஒரு வாழ்த்தை பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாமே !
ShareThis
