புத்தாண்டே வருக ...


ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்த கலை இரவில் எனக்கு வாய்ப்பளித்த தமுஎகசவுக்கு நன்றி ..... (புகைப்படம் எடுத்து தந்த ராஜூ அண்ணாவுக்கு நன்றி)

சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் புத்தகம் அறிமுகம் செய்து நான் பேசியதை கேட்க வருமாறு நண்பர்கள் பலரை நான் அழைத்திருந்தேன். ஆனால் அவர்கள் வேலை சூழல் அவர்களை விடவில்லை, அந்தப் பேச்சு பதிவுசெய்யப்படாததால், காற்றுடன் போனது. ஆனால் இந்த முறை அப்படியாகவில்லை. [:)]. நண்பர்களுக்காக .... கவிதை ... படித்து கருத்துச் சொல்லுங்கள் ....

திருப்பூர் டவுன்ஹாலில் டிசம்பர் 12, 2009 இல் நடைபெற்ற கலை இரவில் நான் வாசித்த கவிதை.


புத்தாண்டே வருக ...

புன்னகை சுமந்தே
நாங்கள்
அழைக்கின்றோம் ஒவ்வொராண்டும்
கனவுகள் ஏந்திக் கொண்டு
கதவுகள் திறந்துவைத்தோம்

காத்திருக்கிறோம் உந்தன்
அதிசயம் அனுபவிக்க ...

புத்தாண்டே வருக நீயும்
புதுயுகம் புலரும் ஆண்டாய் ...
*
கடந்துவந்த வரலாற்றின்
பொன்னுக்கும் மண்ணுக்கும்
கன்னிப் பெண்ணுக்கும் ஆசைப்பட்டு
மன்னர் பலர் சண்டையிட
மக்களெல்லாம் மடியக் கண்டோம் ...

ஒன்றல்ல இரண்டுமுறை
உலகமே மோதக் கண்டோம் ...
இலங்கை, ஆப்கானிஸ்தான்
இன்றுவரை தொடரக் கண்டோம்


போர்க் களங்களில் கண்டோம்
உயிர்கள் சாக ...
மனிதம் அழுக ...
*
நன்மைக்காய் போர்கள் என்றான் - நல்லவை
காக்கவே போர்கள் என்றான் - உண்மைக்காய்
போர்கள் என்றான் - உலகைக்
மாற்றிடும் போர்கள் என்றான்



நேற்று .... ஒருவர்
அமைதிக்கான ”நோபல்” பரிசை வாங்கி
பின் சொன்னார்
உலக அமைதியைக் காக்கவே
தான் போர் புரியப் போவதாக

அன்னையின் உதடுகளில்
பிணம் தின்ணிக் கழுகு ஒன்று கொத்துவதை
முத்தமென்று வர்ணித்தால்
கைகொட்டி சிரியாரோ ?

காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை
சொல்லும் காரணமே மாறியது
மாறவில்லை
கொலைக்களங்கள் ...
--
கல்வி கேட்டோம்
வேலை கேட்டோம்

பசித்து அழும் குழந்தைக்கு உணவு கேட்டோம்

கயிற்றில் தொங்கும் விவசாயி
வாழ்க்கைக்கு விடியல் கேட்டோம்

உழைப்புக்கு மதிப்பாய்
ஊதியம் கேட்டோம்

ஆள்பவரே ... உங்களிடம்
வெறென்ன கேட்டோம் நாங்கள்?

எங்கள் கூப்பாடு நிறுத்தக் கேட்டோம் !

பதிலாய் நீங்கள்
ராம ஜென்ம பூமியென்றும்,
தமிழனென்றும், தெலுங்கனென்றும்
மானமுள்ள சாதியென்றும்
ஈடில்லா இனம் நாம் என்றும்
போதையினை ஏற்றி விட்டீர்

மோதவிட்டீர் இதயங்களை ...
மா ... நிலங்களில்
பிரிவினை தீ வளர்த்து
ஆறாத காயங்களால்
வாட வைத்தீர்...

அப்புறம் ..
நிறுத்திவிட்டீர் கூப்பாட்டை ...

கத்துகின்ற ஏழை அவன்
குரள்வளையை நெறித்துடைத்து
சுலபமாய் ஹா ...
சபாஷ் .. உங்கள் குறுக்கு வழி

அது சாவூரைக் காட்டும் வழி!

*

வருகின்ற புத்தாண்டே
வருக நீ புதிய ஆண்டாய் ...
கடந்துவந்த வரலாற்றின்
காயங்கள் துடைக்கும் ஆண்டாய் ...

கண்ணீர் இல்லாத ஆண்டாய் ....

*
இழந்துபோன இன்பங்கள்
இரட்டிப்பாய் திரும்பட்டும்
சமதர்மப் பூ மரங்கள்
முளைக்கட்டும் உலகெங்கும்

இணையட்டும் கரங்களெல்லாம்
ஒளிரட்டும் பூமி
பரவட்டும் இன்பம்
பறக்கட்டும் அமைதிப்புறா

உலகையே வெற்றிகண்டு
ஆளட்டும் மனிதம் ....

*


ShareThis