இப் புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 7ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை அனைவரும் இலவசமாக இக்கண்காட்சியை கண்டு களிக்கலாம்.
பங்கேற்கும் நிறுவனங்கள்
இதில் தமிழகத்தின் முன்னணி புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் உள்பட மொத்தம் 72 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. குறிப்பாக சாகித்ய அகாடமி, நேஷன்ல் புக் டிரஸ்ட், என்.சி.பி.எச், ஆனந்தவிகடன், ராமகிருஷ்ண மடம், விவேகானந்தா, வேதாத்திரி, ஈஷா, பெரியார், இஸ்லாமிய புத்தக நிலையங்கள், கிழக்குப் பதிப்பகம், உயிர்மை, சிக்ஸ்த் சென்ஸ், பின்னல், பாரதி, லியோ, வம்ஷி, விடியல், நக்கீரன் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மொத்தம் 94 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் குழந்தை இலக்கியம், அறிவியல், கலை, இலக்கியம், மொழி, வரலாறு, அரசியல், தொழில்நுட்பம், தத்துவம், மதம், ஆளுமை, கதை, நாவல்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழ், ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் இடம் பெறவுள்ளன. இத்துடன் குறுந்தகடுகளும் இடம் பெறுகின்றன.
பல்சுவை நிகழ்ச்சிகள்
அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் விதத்தில் ஒவ்வொரு நாள் மாலையும் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சி, சிறப்பு சொற்பொழிவு என பல்சுவை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தின் முன்னணி பிரபலங்கள் தமிழிசை அறிஞர் அரிமளம் சு.பத்மநாபன், த.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., சிற்பி பாலசுப்பிரமணியம், நல்லி குப்புசாமி செட்டி, அ.சவுந்தரராசன், பசுமை இயக்கம் வெ.ஜீவானந்தம், கவியருவி அப்துல் காதர், பேராசிரியர் வெ.இன்சுவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விஜய் டி.வி. புகழ் இரா.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சிறப்புக் குலுக்கல் பரிசுகள்
அத்துடன் இக்கண்காட்சிக்கு வருகை தரும் மாணவ, மாணவியரில் ஒவ்வொரு நாளும் சிறப்புக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 10 பேருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.5000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
ஜெய்வாபாய் பள்ளியில் நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு கண்காட்சி மேடையில் பரிசுகள் வழங்கப்படும்.
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஒவ்வொரு நாள் மாலை நிகழ்ச்சியிலும் ஒருவர் வீதம் சொற்பொழிவாற்றுவர்.
தினமும் குறும்படங்கள்
புத்தகக் கண்காட்சி நடைபெறும் 10 நாட்களும் சர்வதேச அளவிலும், உள்ளூர் அளவிலும் சிறப்பாகப் பேசப்படும் சுமார் 30 அற்புதமான குறும்படங்கள் இங்குள்ள தனி அரங்கத்தில் ஒளிபரப்பப்படுகின்றன. இது 4 மணிக்கு துவங்கும். நிகழ்ச்சிக்கு வருவோர் இலவசமாக இப் படங்களைக் கண்டு களிக்கலாம்.
பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
பார்வையாளர்களுக்கு வசதியாக கண்காட்சி வளாகத்திலேயே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்த வசதியான பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வித இடையூறும் இல்லாமல் எளிதில் வந்து செல்லத்தக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
சிற்றுண்டிச் சாலை ஒன்று அமைக்கப்படுகிறது. குழந்தைகளுக்குத் தேவையான தின்பண்டங்களும் இங்கு கிடைக்கும்.
கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். சுமார் ரூ.1 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு அதைவிட கூடுதல் பார்வையாளர்கள் வருவதுடன், புத்தக விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ShareThis