தோழர். ஜோதிபாசு !

"இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் பிரதமராக ஆகியிருக்க வேண்டியவர்." இப்படித்தான் அவரை எல்லோருக்கும் தெரியும்.

பதவி தேடி வந்தபோதும், அதனை ஒதுக்கிவிட்டு, சுய பலத்தைப் பெற்றபின்னரே இந்தியாவை ஆள்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முடிவெடுத்தது. ஒரு பகுதியினர் அதனை ”வரலாற்றுத் தவறு” என்கிறார்கள். விவாதம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

”மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் எல்லோராலும் கட்சி வித்யாசமின்றி மதிக்கப்படக் கூடியவர், தோழர் ஜோதிபாசு”, உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட ,அவர் இப்போது இல்லை .

சில நாட்கள் முன்பாக அவர் இறந்துவிட்டார் என்று
வதந்தி பரவியபோது, பல்வேறு தரப்பினரும் வருத்ததுடனே விசாரித்ததைக் காண முடிந்தது.

இளமையிலே அரசியல்:
இங்கிலாந்தில் தமது சட்டப்படிப்பின்போதே, அரசியல் ஈடுபாடு பெற்ற அவர் ,இந்தியா திரும்பியதும் இடதுசாரி அரசியலில் பங்கெடுக்க முடிவு செய்தார். அவரின் எண்ணத்தை பெற்றோரிடம் தெரிவித்தபோது, எல்லா பெற்றோரையும் போலவே அவர்களும் எதிர்த்தார்கள், பாசத்திலும், கோபத்திலும் தங்கள் மகனை கட்டிபோட்டு வைக்க எண்ணினார்கள். வீட்டுக்குள் அடக்கி வைத்து “நல்ல பிள்ளையாக்கப்”(!) பார்த்தார்கள்.

ஆனாலும் அவர்களை மீறி அப்போது தடை செய்யப்பட்டிருந்த இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தன்னை இனைத்துக் கொண்டார். வரலாறு அவருக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது, இந்து - முஸ்லீம் மதங்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியை நேரடியாகக் கண்டுணர்ந்தார். அந்த நேரடி அனுபவம் அவரை, இந்தியாவில் ”இந்து - முஸ்லீம் உள்ளிட்ட மத அடிப்படைவாதிகளுக்கு, எதிராகக் கடைசிவரை நிற்கவைத்தது.

ஆங்கிலேயர்கள் அடக்குமுறை:
இவரைப்போன்ற தலைவர்கள் ஆங்கிலேயே அரசாங்கத்தை நடுங்க வைத்தார்கள். கம்யூனிஸ்டுகள் பல சதி வழக்குகளை சந்தித்தார்கள். காங்கிரஸ் மீதும் முஸ்லீம் லீக்கின் மீதும் கனிந்த பார்வை கொண்டிருந்த அந்த அரசு கம்யூனிஸ்டுகளை முற்றாக ஒழித்துவிடத் துடித்தது. அதுவே கம்யூனிஸ்டுகளின் மீது மக்கள் உறுதியான பற்றுக் கொள்ள வழியும் வகுத்தது. சுதந்திரத்திற்கு பின்னர் தோழர் ஜோதிபாசு, வங்காள சட்டமன்றத்திற்கு ரயில்வே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கட்சி:
1964ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோது, அதன் அரசியல் தலைமைக் குழுவின் முதல் 9 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து 1967 மற்றும் 1969 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

அவசர நிலை:
1975 இல், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவெங்கும் கருத்துச் சுதந்திரம் தடுக்கப்பட்டது, கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பல்லாயிரம் முன்னணி கம்யூனிஸ்ட் ஊழியர்களை இந்தியா இழந்தது, அதில் ஆயிரத்திற்கும் அதிகமானோரை மேற்கு வங்க மாநிலம் இழந்தது. இருப்பினும் அஞ்சாமல் செயல்பட்ட ஜோதிபாசு உள்ளிட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள், மக்களின் ஆதரவை வென்றெடுத்தார்கள்.

இடது முன்னணி:
1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இடதுசாரிகளின் கூட்டணி பெரும்பான்மை பெற்றது. அந்த அரசு நிலச் சீர்திருத்ததை அமல்படுத்தியது. சுதந்திரத்திற்கு முன்பாக நில உடமை என்பது அரசர்களைச் சார்ந்ததாக இருந்தது. பெரும்பாலான நிலங்கள் பெரிய ஜமீந்தார்களிடமும், அரச பரம்பரையின் கடைக்கண் பார்வை பெற்றவர்களிடமும் இருந்தது. மிக முக்கியச் சொத்தான நிலம் இவ்வாறு சிறு பகுதியினரின் கீழ் இருந்ததை மாற்றி. உழைக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. மேலும், பொது வினியோக முறை, கல்வி, பொது சுகாதாரம் பேணுதல் எனப் பலவிசயங்களிலும் அந்த அரசு சிறப்பாக செயல்பட்டது.

இவ்வாறு, சிறப்பான ஆட்சிமுறையின் காரணாமாக 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வரை. 23 வருடங்கள் தொடர்ந்து இடது முன்னணி அரசின் முதலமைச்சராக அவர் பணியாற்றினார். 1996இல் தான் மேற்சொன்ன பிரதமர் பதவி மார்க்சிஸ்ட் கட்சியைத் தேடி வந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்திய ஒருமைப்பாடு:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில் தோழர் ஜோதிபாசு மேற்கொண்ட நேர்மையான நிலைபாடு, இன்றளவும் நினைவு கூறப்படுகிறது. இந்திய ஒருமைப்பாட்டை, மதச் சர்பின்மையை சுர்ஜித், ஜோதிபாசு ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் செயல்பாடுகள், தனிப்பட்ட அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. விவசாயம், சிறுதொழில்கள், சாதாரண ஏழை எழிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது விழும் தாக்குதல்களுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எப்போதும் அவர் பதிவுசெய்து வந்திருக்கிறார். அதற்கான போராட்டங்களில் முன்னணியில் நின்றிருக்கிறார்.

இந்திய ஜனநாயகம்:
குறிப்பாக, ஒன்றுபட்ட இந்திய அரசிற்குள் அமைந்த மாநில அரசுக்கு உள்ள் குறைந்தபட்ச அதிகாரத்தை வைத்துக் கொண்டு, பொதுவுடமைக் கட்சியின் தலைமையிலான அரசை, தொடர்ந்து 30 வருடங்களாக நடத்திக் காட்டியிருப்பது, உலக கம்யூனிச இயக்கங்களுக்கே உதாரணமானதாக உள்ளது. தோழர் ஜோதிபாசுவின் வாழ்க்கை இன்றை இளம் அரசியல்வாதிகள் படித்து, பின்பற்றத் தகுந்தது. அவரின் இழப்பு , கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமன்றி நாட்டிற்கே, பேரிழப்பாகும்.

comrade Jyoti badu, jyothi basu, jothibasu highly critical at west bengal
ShareThis