அவளுக்கான கடைசி கவிதை ...




கவிதைகள்

எழுதும்போது
எல்லாம் சுகமே

**
என் கவிதை ஒன்றை
முதன் முதலாய்
நீ வாசித்து நேசித்த போது
கரைந்தே போனேன் ...
மிரட்டும் உன்
விழிகளில்
குடியமர்ந்தேன் ...

இருதுளி கண்ணீரில்
மூழ்கி மரணிக்கும் வரை
சுகமாகவே தொடர்ந்தென
எல்லாம் ...

**
இன்றோ அத்தனையும் தலைகீழ் ...

உற்சாகம் கொடுத்த
வார்த்தைகளில்
ஒரு எழுத்துப் பிழையும்
இல்லாத போதும்

வாட..வைக்கின்றன .. !

செல்லமான பார்வை
பரிமாற்றங்களில்
கண்கள் அப்படியே
இருக்கும்போதும்

நெஞ்சம் ரணமாகிறது ...!

நினைவுகள்
நிறம்பிக்கிடந்த தனிமை
சூழல் மாறாதபோதும்

சுகம்தர மறுக்கிறது...!

”பயணத்தில்
இன்பம் கொடுத்த
பாதைகள்
பிரிவில் எப்போதும்
முள்ளாய் குத்துகின்றன!”

**

உனக்கே உனக்காக
எழுதப்பட்டவை
என் கருவூலம் உடைபடும்
அளவு பெருகிவிட்டன ...
இன்னும் காகிதம் கேட்டு
தவிக்கிறது பேனா

மனம் புரியாத
உன் நினைவுகளுக்கு
மரணதண்டனை கொடுத்து
எழுதத் துவங்கினேன்
கடைசிக் கவிதை
-

தீர்ப்பின் முடிவில்
மரபின் காரணமாய்
முள் உடைத்தேன் ...
முற்றுக்கு பதிலாக
விழுந்தது ”கமா,” ...
ShareThis