
தொழிலாளர்கள் திரட்டிக் கொடுத்த தொகையுடன் நிர்வாகத்தின் பங்கையும் சேர்த்து ரூ.1,75,000 ஐ நிறுவன மேலாளர் அரோரா, அவர்களின் பெற்றோரிடம் வழங்குகிறார்.
ஒரு கம்பெனியில் பணியாற்றுகிறீர்கள். திடீரென தீராத வியாதி உங்களை தாக்குகிறது. நீங்கள் எந்த ஒரு மருத்துவக் காப்பீடும் செய்திருக்கவில்லை, அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லை. என்ன செய்வீர்கள்?
நிற்கதியாய் உணர்வோம் இல்லையா?. அந்த நேரத்தில் உங்கள் உடன் பணியாற்றும் நண்பர்கள் இணைந்து ஒரு தொகையைக் கொடுத்து உதவினால்? அதுதான் நட்பென்று தூக்கி வைத்துக் கொண்டாடுவோம் ... சக தொழிலாளர்கள் அனைவரும் உங்களை தெரிந்தவர் தெரியாதவர் அனைவரும் இணைந்து, நிர்வாகத்திடமும் பேசி, ஒரு பெரும் தொகையை கொடுத்து உதவினால்?”இந்தக் காலத்தில் யார் இப்படி செய்வார்கள்” என்று கேட்கிறீர்கள் தானே?
அது நடந்திருக்கிறது. சங்காமாக இணைந்த தொழிலாளர்கள் இதனைச் சாதித்திருக்கிறார்கள். திருப்பூர் வீரபாண்டியில் அரோரா பிரிண்டிங் நிறுவனம் அமைந்துள்ளது. இதில் பணியாற்றிவந்த மாரிமுத்து என்பவர் நோயுற்று திடீரென மரணமடைந்தார். அவரை இழந்த குடும்பத்தினர் நிற்கதியாகினர். மாரிமுத்துவின் மருத்துவமனைக் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத துயரமான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், அங்கிருந்து சிஐடியு சங்கத்தினர், சக தொழிலாளர்களிடமும் பேசி தங்கள் ஒருநாள் ஊதியத்தை அக்குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்தனர். அவர்கள் கொடுத்தது மட்டுமல்லாமல் அலுவலக ஊழியர்கள் உட்பட மொத்தம் 600 தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியத்துடன், நிவாகத்தின் சார்பில் ரூ.25 ஆயிரம் உதவித் தொகையாக பெற்று மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து ரூபாய் அக்குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் சுமார் ரூ.48 ஆயிரத்தை மருத்துவமனை நிதியாகவும், ஒரு லட்சத்து 27 ஆயிரத்தை காசோலையாகவும் அவர்கள் வழங்கினர். இதனை மாரிமுத்துவின் தந்தை ஏ.சங்கரன் பெற்றுக் கொண்டார். வயது மூப்படைந்த நிலையில் கண்ணீர் தத்தளித்த அவர்கள் கண்ணீருடன் அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ராஜகோபால் தலைமைதாங்கினார். பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, அரோரா நிறுவன உரிமையாளர் சுசில் எஸ்.அரோரா, நிர்வாகத்தினர், சிஐடியு அரோரா கிளை தலைவர் முனியாண்டி, செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள், “சக தொழிலாளர்கள் குடும்பத்தை நமது குடும்பமாக நினைக்கவேண்டும் என்ற உயர்ந்த பண்பு இதிலிருந்து வெளிப்படுகிறது. ஏற்கனவே இதுபோல மரணமடைந்த தொழிலாளர்களுக்கு உதவியிருக்கிறோம். இனி வரும் காலத்திலும் இவ்வாறு உதவி செய்ய வேண்டும்.” என்றனர்.
அவர்களுடன் பேசியபோது அந்த நிறுவனத்தின் சிஐடியு கிளைத் தொழிலாளர்கள் இரத்த தானம் உள்ளிட்ட உதவிகளையும் தயங்காமல் செய்வது தெரியவந்தது. தொழிலாளர்களின் இந்த செயல்பாடுகளுக்கு நிர்வாகமும் நல்ல ஒத்துழைப்பை வழங்கிவருகிறது. 500 தொழிலாளார்கள் திரளாகப் பங்கெடுத்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் நெகிழச்செய்வதாக இருந்தது.
கருத்துக்களில் வாழ்த்துச் சொல்லுங்கள் ... [:)]
ShareThis
