ஒரு விற்பனைப் பண்டத்தின் இரண்டு காரணிகள்

சரக்கும் பணமும் மூலதனம் - I


சரக்கு (அ) விற்பனைப் பண்டம் (commodity): இரண்டு காரணிகள்.

  ன்றைய உலகில் பொருட்களை உருவாக்கி, அதனை விற்பதில் ஒவ்வொரு மனிதனும் பங்கெடுக்கவேண்டியுள்ளது. அதற்காக அவன் தேர்ந்தெடுப்பது எந்தப் பொருளாகவும் இருக்கலாம், கரும்பலகை முன் நின்று பாடம் எடுக்கலாம், சாலையோரம் மூட்டை தூக்கலாம், விமானம் ஓட்டலாம் (அ) தயாரிக்கலாம், ஆயுதம் தயாரிக்கலாம், சவரம் செய்யலாம் அல்லது கடற்கரையில் முருக்கு விற்கலாம். ஒரு மனிதனுக்கு தேவையான எதுவும், அது பண்டமாகவோ, சேவையாகவோ அடுத்த மனிதனால் ஒரு ஆதாயம் பெற்றுக் கொண்டு நிறைவேற்றபடுமானால், அதுதான் சரக்கு.

மனித குலம் நாடோடியாக இருந்த போது இல்லாத இந்தக் குணம் அவனுக்கு இடையில்தான் ஏற்பட்டது என்றாலும், அது கட்டாயமானது.

”ஒரு மனிதன்” (A) - அவன் தயாரிக்கும் பொருள்/அவனால் செய்யப்படும் சேவை (B)- இவற்றின் மூலம் பயனடையும் (C) இன்னொரு மனிதன் என்ற அளவில் ஒவ்வொருவரும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். (A)-(B)-(C). இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் சிறப்பம்சமான விற்பனைப் பண்டம் என்பது குறித்த சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வதன் மூலமே விடை தெரியாத பல கேள்விகளுக்கு நாம் பதில் அறியப் போகிறோம்.

உதாரணம் ஒன்றிலிருந்து துவங்கலாம்.
பழைய பண்ட மாற்று முறையை மனதில் கொள்ளுங்கள். அங்கே பொருளுக்கு பொருள்தான் மாற்றிக் கொள்ளப்படும், கோதுமை விவசாயி ஒருத்தருக்கு ஒரு மூட்டை உப்பு வேண்டுமெனில் அதற்கு தகுந்த அளவு கோதுமையை உப்பளக்காரரிடம் கொடுத்து உப்பை அவர் பெற்றுக் கொள்கிறார். எனவே ஒரு மூட்டை உப்பும், X அளவு கோதுமையும் இங்கே பண்டங்கள்.

பண்டம் என்பது, வாழ்க்கைக்கு தேவையான (உப்பு போன்ற) வாழ்வு சாதனமாகவோ அல்லது உற்பத்திக்கு அவசியமான (மாடு, உரம் போன்ற) சாதனமாகவோ இருக்கலாம்.

இந்த வகையில் அவற்றிற்கு பயன்பாட்டு மதிப்பு உள்ளது. அதே போல கோதுமைக்கும், உப்புக்கும் இடையே ஒரு பொதுவான “மதிப்பும்” உள்ளது.


X அளவு கோதுமை = Y அளவு உப்பு
X அளவு கோதுமை = Z அளவு துணி
X அளவு கோதுமை = L அளவு தானியம்,

என்றவாறு அந்த விவசாயி பல்வேறு பொருட்களை வாங்குகிறார். இங்கே வேறுபட்ட பொருட்கள் ஏதோ ஒரு மதிப்பைப் பொருத்து சமமாகின்றன. எனவே ஒரு பண்டம் பயனுள்ள பொருளாகவும், பரிவர்தனைக்கு ஏற்ற பொருளாகவும் இரண்டு மதிப்புகளையும் கொண்டிருக்கிறது.

கோதுமையின் பயன் மதிப்பு என்றால், அதன் உயிர்ச் சத்து. யன் மதிப்பு என்பது மனித உபயோகத்தை பொருத்தது. பொருளின் பயன் மதிப்புக்கள் காலத்திற்கு ஏற்ப மாறும். அதனை கண்டறிவது வரலாற்று ஆய்வாளர்களின் வேலை.


இப்போது,

X அளவு கோதுமை = Y அளவு உப்பு = Z அளவு துணி = L அளவு தானியம்

என்பதிலிருந்து, அவற்றின் பயன் மதிப்பை நீக்கிவிட்டு பார்த்தால், ”ஏதொ ஒன்று” மிச்சம் இருக்கும். அதுதான் இந்த வேறுபட்ட பண்டங்களை சமப்படுத்துகிறது.



இன்று, ஒரு சிறுவனிடம் போய், “ஒரு மிட்டாய்க்கு” சமமான இன்னொரு பொருளைக் கூறு என்று கேட்டால், ஒரு சிக் சாம்புவை கை காட்டுவான். முற்றிலும் வேறான அந்தப் பொருட்கள் இரண்டையும் இணைக்கும் விசயம், “ஒரு ரூபாய்” எனும் மதிப்புதான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால், நமது கோதுமை விவசாயி பண்டமாற்று முறையில் பரிவர்தனை செய்கிறார்.

"This common "something" cannot be either a geometrical, a chemical, or any other natural property of commodities. Such properties claim our attention only in so far as they affect the utility of those commodities, make them use-values. .................. ... If then we leave out of consideration the use-value of commodities, they have only one common property left, that of being products of labour. "
இந்த இடத்தில் “ஏதோ ஒன்றாக” செயல்படும் அந்த விசயம் ?. உழைப்பு.

மனித உழைப்பின் உற்பத்திப் பொருளாக இருப்பதே பண்டங்கள் எல்லாவற்றிற்கும் இடையிலான ஒற்றுமை.

முடிவாக, விற்பனைப் பண்டத்தின் இரண்டு காரணிகள், அதன் பயன் மதிப்பும், பரிவர்தனை மதிப்பும் என்பது தெரியவருகிறது. அதாவது, “ஒரு பொருளுக்கான அவசியமும்”, ”அதை நிறைவேற்றுகிற மனித உழைப்பும்”. மேலும் எளிய உதாரணம் மூலம் விளக்கினால், ஒரு சட்டை, உடுத்தத் தகுதியானதாக இருப்பதும், அதனுள் செலுத்தப்பட்ட உழைப்பும் சட்டையை , விற்பனைப் பண்டமாக மாற்றுகின்றன.

எனவே, ஒரு பொருளுக்கு பரிவர்தனை மதிப்பை (பொதுவாக, மதிப்பை) வழங்குவது அதனுள் செலுத்தப்படும் உழைப்பே.

(திருத்தப்பட்டது...)
ShareThis