ஒரு பண்டத்தின் ”மதிப்பு” (விலை) -இன் வடிவம் ...


பிரிவு 3:  
மதிப்பு வடிவம் அல்லது பரிவர்தனை மதிப்பு

ண்பர் ஒருவரின் எழுதுபொருள் கடையில் புதிதாக ஒரு பெட்டி நிறைய பேனாக்கள் வாங்கிவந்தார்கள். அப்போது அங்குவந்த வாடிக்கையாளர் ஒருவர் பேனாக்களை ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், அதில் ஒன்று தனக்கு வேண்டும் என்றும் வாங்கிக் கொண்டார். ஆனால்  சிறிது நேரம் கழித்து கடைக்குத் திரும்பிய வாடிக்கையாளர் பேனா எழுதவே இல்லை என்று திருப்பிக் கொடுத்தார். உடனே நமது நண்பரும், அந்தப் பெட்டியிலிருந்து வேறு பேனா ஒன்றை எடுத்துக் கொடுத்தார். ஆனால், அந்தப் பேனாவும் எழுதவில்லை. இப்படியாக வாங்கிவந்த பேனாக்கள் அனைத்துமே எழுதவில்லை என்பது தெரியவந்தது. உடனே பேனாவுக்காக தான் பெற்ற பணத்தை திருப்பின் கொடுத்ததுடன். பேனா பெட்டியைக் கொடுத்த  மொத்த விற்பனையாளரிடம் அதனை திருப்பிக் கொடுத்துவிட்டார்.

பொருளாதார மொழியில் சொன்னால், அந்தப் பேனாக்களுக்கு பயன் - மதிப்பு இல்லாததால் அவை பரிவர்தனை மதிபையும் இழந்து  பயனற்றுப் போனது. மேற்கண்ட சம்பவத்தில் பயன் மதிப்பு நமக்கு நன்றாக புரிபடுகிறது, ஆனால் பரிவர்தனை மதிப்பு என்பது என்ன?.

சந்தையில் விற்கப்படுகிற எந்த ஒரு பொருளுக்கும் இரண்டு மதிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக பேனாவையே எடுத்துக் கொள்ளலாம். பேனா எழுதும் என்பது அதன் பயன்பாடு (பயன்-மதிப்பு). பேனா ”இவ்வளவு” பெரும் என்பது அதன் மதிப்பு (விலை).

பேனாவின் பயன்பாடு நமது கண்ணுக்கு தெளிவாகத் தெரிகிறது. உணரமுடிகிறது. ஆனால் அதன் மதிப்பு வடிவம் அதனை வாங்கும்போது தான் தெரிகிறது. அதாவது ஒரு பொருள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும்போதே, (சமூக உறவிலேயே) அதன் மதிப்பு வெளிப்படுகிறது.

பண்டமாற்று வடிவம்:
X அளவு சரக்கு A இன் பெறுமானம் Y அளவு சரக்கு B
X அளவு சரக்கு Aஇன் மதிப்பு =   Y அளவு சரக்கு B இன் மதிப்பு

ஒரு கிலோ அளவுடைய கோதுமையின் பெறுமானம் 5 கிலோ அளவுடைய உப்பு.

நமது கோதுமை விவசாயி எப்போதும் போல பண்டமாற்று வணிகத்தில் தனக்கு தேவையானதை வாங்குகிறார். அதில்,  ஒரு கிலோ கோதுமையின் மதிப்பும், 5 கிலோ உப்பின் மதிப்பும் சமமாக இருக்கிறது என்பது தெரிகிறது.

இந்த ஆரம்ப பண்டமாற்று வடிவத்தில்தான் ஒரு பொருளின் விலை குறித்த மர்மம் அடங்கியுள்ளது.

மேற்கண்ட //1 கிலோ கோதுமை க்கு சமம் 5 கிலோ உப்பு// என்ற சமன்பாட்டில் கோதுமையின் மதிப்பு உப்பின் வழியாக தெரிவிக்கப்படுகிறது. எனவே கோதுமை என்பது ஒப்பீடு, உப்பு என்பது சமதை.

இந்த ஒப்பீடு மற்றும் சமதை வடிவங்கள் இரண்டு சரக்குகளுக்கும் பொருந்தும், என்றாலும் ஒரே நேரத்தில் ஒரு பண்டம் ஒப்பீடாகவும் சமதையாகவும் இருக்க முடியாது. (அதாவது ஒரு பொருளை அதே பொருளுக்கு யாரும் பண்டமாற்று செய்வதில்லை.) எனவே, ஒரு பண்டத்தின் மதிப்பை தெரிவிக்க முற்றிலும் வேறான இன்னொரு பண்டம் தேவை என்பது முன்தேவையாகும்.

ஒப்பீட்டு வடிவம்:

கோதுமை = உப்பு என்றால், அதில் உப்பு, கோதுமையுடைய மதிப்பின் நிலவலாகவே உள்ளது. அதவது கோதுமை உற்பத்திக்காக செலவிடப்பட்ட மனித உழைப்பை, உப்பின் உற்பத்திக்காக செலவிடப்பட்ட உழைப்புக்குச் சமப்படுத்துகிறோம். கோதுமையின் மதிப்பை தெரிவிப்பதே அதன் வேலை.

(இவ்வாறான சமன்பாடுகள், வெவ்வேறு சரக்குகளில் நிலவும் பல வகைப்பட்ட உழைப்பை, தெளிந்த மனித உழைப்பாக பெயற்கிறது. அதன் மூலம் ஒரு பொருளின் மதிப்பை உழைப்புதான் படைக்கிறது என்பதை எடுப்பாகக் காட்டுகின்றன.)

ஆ) அளவு வழி நிர்ணயிப்பு:

ஆனால் ஒரு பண்டத்தை பொத்தாம் பொதுவாக இன்னொரு சரக்குடன் சமப்படுத்த முடியாது. எனவே ஒரு திட்டமான அளவுடைய உழைப்பை மதிப்பு வடிவம் தெரிவிக்க வேண்டும். எனவேதான் சமன்பாடு 1 கிலோ கோதுமை = 5 கிலோ உப்பு என்பதாக அமைகிறது.
ஆனால், இதில் காலத்திற்கு ஏற்ப திறனில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும்.

I) உப்பு உற்பத்தி தடையில்லாமல் நடந்துகொண்டிருக்கும் வெயில் காலத்தில், ஒட்டுமொத்த கோதுமை விளைச்சல் பாதியாகக் குறைகிறது. நமது விவசாயிகள் கோதுமையின் தயாரிப்பில் செலுத்திய உழைப்பின் சராசரி மதிப்பு அதிகரிக்கிறது.

இப்போது 1 கிலோ கோதுமை = 10 கிலோ உப்பு என சமன்பாடு மாறுகிறது. அதுவே, கோதுமை தயாரிக்க தேவையான உழைப்பின் சராசரி மதிப்பு குறையும் போது. சமன்பாடு 1 கிலோ கோதுமை = 2 1/2 கிலோ உப்பு என சமன்பாடு மீண்டும் மாற்றமடைகிறது.

II) கோதுமை விளைச்சல் அமோகமாக இருக்கும் காலத்தில் உப்பு உற்பத்தி மேற்கண்ட மாற்றங்களை அடைவதாகக் கொள்வோம். இப்போது உப்பில் உருக்கொண்டிருக்கும் சராசரி மனித உழைப்பின் அளவு 2 மடங்கானால் 1 கிலோ கோதுமை = 2 1/2 கிலோ உப்பு என சமன்பாடு மாறுகிறது. அதுவே, உப்பு தயாரிக்க தேவையான உழைப்பின் சராசரி மதிப்பு குறையும் போது. சமன்பாடு 1 கிலோ கோதுமை = 10 கிலோ உப்பு என  மாற்றமடைகிறது.

ஒரு பண்டத்தின் (கோதுமை) மதிப்பு மாறும், அல்லது அதன் ஒப்பீட்டு தெரிவிப்பின் (உப்பு) மதிப்பு மாறும். இவ்வாறு அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை சமன்பாடுகள் அப்படியே பிரதிபலிப்பதில்லை.

சமதை வடிவம்:
கோதுமைக்குச் சமதையாக உப்பு தெரிவிக்கப்பட்டதைப் போல, மதிப்பு சமன்பாட்டில் ஒரு பண்டத்திற்கு இன்னொரு பண்டம் சமதையாகச்  செயல்படுகிறது. உதாரணமாக, ஒரு கிலோ வெல்லத்தை இரும்பு எடைக்கல்லை வைத்து அளக்கும்போது அதன் எடை தெரியவருகிறது. அதைப்போலத்தான் இந்த சமதையின் பணியும். இருப்பினும், இரும்பு அளவை எடை எனும் உணரக்கூடிய இயற்கையான பண்பைக் காட்டுகிறது.  சமதையோ இயற்கை அல்லாத, சமூகத் தன்மைவாய்ந்த பண்பை (மதிப்பை) காட்டுகிறது.

அதாவது, நமது கோதுமை விவசாயியிடம் உப்பளக்காரர் பண்ட மாற்றில் ஈடுபடுகிறார் எனும்போது உப்பு கோதுமையின் சமதையாக தெரிகிறது. அதுபோலவே மற்றொரு பகுதியில் இருந்த பார்த்தால் உப்பளக்காரர் கோதுமையை வாங்கி பண்டமாற்றில் ஈடுபடுகிறார். இப்போது கோதுமை சமதையாகிறது. இருந்தாலும் இங்கே ஒரு புறத்தில் இருந்து மட்டுமே, பரிவர்தனையை நாம் நோக்குகிறோம்.

(பண்டத்தில்) கோதுமையில் உள்ள மனித உழைப்பின் புலப்பாட்டு வடிவமாக (சமதை) உப்பு செயல்படுகிறது.சமதையில் இடம்பெற்றுள்ளதும் கூட தனி ஆட்களின் உழைப்பே என்றாலும், அது நேரடியாக சமூகத் தன்மை வாய்ந்த ஒன்றாகவும் செயல்படுகிறது.

இந்த சாதாரண மதிப்பு வடிவத்தின் சமதை யின் உயர்நிலை வளர்ச்சியே பணம். பணம் உருவான படிநிலைகளை அடுத்த பதிவில் காணலாம்.
ShareThis