இந்தத் தளத்திற்கு உங்களை வரவழைத்த விசயம் எதுவாகவும் இருக்கலாம், நீங்களும் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களைப் பொருத்துக்கொள்ள முடியாதவராக, அதற்கான தீர்வுகளைத் தேடும் ஆர்வம் மிக்க இளைஞராக இருக்கலாம். அது குறித்த விவாதங்களத் தேடி இங்கே வந்திருக்கலாம். இடதுசாரி ஆதரவாளராக, ஒரு கம்யூனிஸ்டாக இருக்கலாம். அல்லது இவை எதுவும் பிடிக்காத ஒரு வலதுசாரியாக, முதலாளித்துவத்தின் ஆதரவாளாராக, எதிர்க்கருத்துகளின் மீது தங்கள் தரப்பின் நியாயங்களை எடுத்து வைப்பவராக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும் சும்மா, பொழுதுபோக்காக இந்தத் தளத்திற்குள் நீங்கள் வந்திருக்கப் போவதில்லை. அப்படி வந்திருந்தால் இதனைத் தாண்டி நீங்கள் படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
எனவே முதலில் இந்தத் தளம் செயல்பாடுகள், நோக்கம் குறித்து விளக்க வேண்டியது எமது கடமை. இதனைச் செய்யும்போதுதான், வாசகர்கள் முகம் பார்த்துப் பேசும் உணார்வை ஏற்படுத்த முடியுமென நினைக்கிறேன். அதே சமயம், இது சுயவிளம்பரமாகப் போய்விடக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்கிறேன்.
முதலில், www.sindhan.info, sindhan.blogspot.com - ஆகிய தளங்கள், எல்லோரையும் போலவே சொந்தக் கருத்துக்களை மட்டும் மேடையேற்றி, அதனைச் சிலபேர் படித்து கருத்துரையிடும்போது மகிழ்ந்துகொள்வதாகத் தான் இருந்தது. ஆனால், அது வெகு காலத்திற்கு நீடித்திருக்கவில்லை. Blogger.com என்பது இன்றைய கணினி யுகத்தில் மிகச் சிறந்த ஏற்பாடு தான். இதில் யார் வேண்டுமானாலும் எழுதும் சுதந்திரம் இருக்கிறது. அதே சமயம், ”நான் எழுதுவதே சிறந்தது” என்ற முடிவிற்கு ஒவ்வொருவரையும் கொண்டுசெல்லும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, இந்தத் தளத்தை மார்க்சியக் கருத்துக்களின் களஞ்சியமாக மாற்ற முடிவு செய்தோம்.
இந்தப் பக்கத்தில் எளிய முறையிலான மார்க்சியப் படைப்புகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. பாடல்கள், ஒளிப்படங்கள், புகைப்படங்கள் திரட்டும் இத்துடை இணைத்து வழங்கப்பட உள்ளது. இடதுசாரி அரசியல் ஆர்வலர்களுக்கான தளமாக sindhan.info வை முழுமைப்படுத்த உங்கள் அனைவரின் பங்களிப்பையும் வேண்டுகிறோம்.
ShareThis
